சட்டவிரோதமாக ஆண் குழந்தை விற்பனை: கள்ளக்காதலில் பிறந்ததால் ரூ.2 லட்சத்துக்கு விற்றது அம்பலம்

கோப்புப்படம்
கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தாய், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை காரமடையை சேர்ந்தவர் அனிதா (வயது 28). இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மாயமாகி விட்டதாகவும், கண்டுபிடித்து தருமாறும் துடியலூர் போலீசில் அனிதா புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசாரின் தீவிர விசாரணையில் குழந்தை கடத்தப்படவில்லை என்பதும், குழந்தையை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் அனிதாவின் கள்ளக்காதலன் மோகன்ராஜுக்கு தொடர்பு இருப்பதும், மேலும் தாய் அனிதாவுக்கு தெரிந்தே இந்த சம்பவம் நடைபெற்று இருந்ததும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த குழந்தை கன்னியாகுமரியில் உள்ள தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. உடனடியாக கன்னியாகுமரிக்கு சென்ற போலீசார் 1 வயது ஆண் குழந்தையை மீட்டு கோவைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் அனிதா (28), அவருடைய கள்ளக்காதலன் பெரம்பலூர் கீழ்பிள்ளையனூரைச் சேர்ந்த பி.மோகன்ராஜ் (29), கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த எம்.ரஞ்சிதா என்ற ஆர்த்தி (32) சிங்காநல்லூரைச் சேர்ந்த பி.சுஜாதா (32), எம்.புகழம்மாள் (30), சேலம் தாசம்பட்டியை சேர்ந்த லில்லி (40), சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கருமாபுரத்தை சேர்ந்த பி.ஷோபா (45) ஆகிய 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ளக்காதலில் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய அனிதாவும், மோகன்ராஜூம் குழந்தையை கன்னியாகுமரியில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். குழந்தையை விற்பது தொடர்பாக அனிதாவுக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அனிதா தனது குழந்தை கடத்தப்பட்டதாகவும், அந்த குழந்தையை மீட்டு தரும்படியும் போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் அவரே குழந்தை தற்போது கன்னியாகுமரியில் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்திருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தான் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.