வடிகால் பணிகளை திமுக அரசு முழுமையாக செய்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது - எடப்பாடி பழனிசாமி
குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைதொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது. 20 செ.மீ. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கூறினர். ஓரளவு பெய்த மழைக்கே ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.
குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை உள்ளது. சென்னையில் எங்கும் தண்ணீரே தேங்கவில்லை என்பதைபோல் திமுகவினர் கூறி வருகின்றனர். மழைநீர் வடிகால்களை முறையாக தூர்வாராததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.
ரெட் அலர்ட் கொடுத்த பிறகும் மழையே இல்லை. வெயில்தான் பிரகசாமாக இருக்கிறது. பெரிதாக மழை பெய்யாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கவில்லை. ஒருவேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் நம்மால் வெளியே சென்றிருக்க முடியாது. அதிமுக ஆட்சியில் பல புயல்கள் வந்தன. அப்போது புயல் வேகத்தில் பணியாற்றி மக்களின் பிரச்சினைகளை தீர்த்தோம்.
1,840 கி.மீ. அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவடைந்தது. எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை. வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் மழைநீர் தேங்கி இருக்காது.
திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் படி எடுத்த நடவடிக்கைகள் என்ன? திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பல்வேறு அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை துணை முதல்-அமைச்சர் ஒருவரே கவனிக்கிறார். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி மட்டுமே வேலை செய்கிறார்.
ஓபிஎஸ் உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை. பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள். அதிமுக பிரிந்து இருக்கிறது என சொல்லாதீர்கள், அதிமுக ஒன்றுதான். அது நாங்கள்தான். நீக்கப்பட்டவர்களை இணைக்க 6 முக்கிய தலைவர்கள் என்னிடம் பேசியதாக வெளியாகும் செய்தி பொய். ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கவர்னர் அரசைப் பாராட்டியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது
இவ்வாறு அவர் கூறினார்.