ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாடு, சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒசூரில் 2,000 ஏக்கர் நிலப் பரப்பில் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அவர்கள் 27-06-2024 அன்று அறிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் பெங்களூரு விதான் சவுதாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றதாகவும், இந்தக் கூட்டத்தில், பெங்களூருவில் இரண்டாவது சர்வதேச விபான நிலையம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும். இதற்காக ஏழு இடங்கள் அடையாளம் காணப்பட்டு, கடைசியில் 3,000 ஏக்கர் அளவுக்கு காலி இடம் இருக்கும் சோமனஹள்ளி என்ற இடத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு செய்து இருப்பதாகவும், இந்தக் கூட்டத்தில் கர்நாடக மாநில துணை முதல்-அமைச்சர் மற்றும் இதர அமைச்சர்கள் கலந்து கொண்டதாகவும், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச விமான நிலையம் சோமளஹள்ளியில் கட்டப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு ஓசூரில் இரண்டாவது விமான நிலையத்தை கொண்டு வரப்போகிறது என்பதற்காக இல்லாமல், 5,000 ஏக்கர் நிலப் பரப்பில் சர்வதேச தரத்திற்கு இணையான விமான நிலையத்தை இங்கே நாம் கொண்டு வரவேண்டும் என்று கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி பேசியதாகக் கூறப்படுகிறது. ஒரு விமான நிலையத்திற்கும், மற்றொரு விமான நிலையத்திற்குமான இடைவெளி 50 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிலையில், முதல்-அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஓசூர் சர்வதேச விமான நிலையத்திற்கும். கர்நாடக அரசு முடிவு செய்துள்ள சோமனஹள்ளி என்ற இடத்திற்கும் இடையிலான தூரம் 47 கிலோ மீட்டர் மட்டுமே.
ஓசூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் சுட்டப்பட்டால், பெங்களூரின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற எண்ணத்தில், ஓசூருக்கு அருகில் உள்ள சோமனஹள்ளியில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எது எப்படியோ, ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓசூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் அவர்களை அண்ணா திராவிர முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.