திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (03.01.2025) சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தீயணைப்புத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், திருக்கோயில் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.
அதன் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது;-
108 திவ்யதேசங்களில் 84 -வது திவ்ய தேசமாக போற்றப்படுகின்ற திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. காவல்துறை சார்பில் 3 துணை ஆணையர்கள் தலைமையில் உதவி ஆணையர்கள், காவல் துறை ஆய்வாளர்கள் என ஒரு முறைக்கு 600 காவலர்கள் வீதம் 3 முறைகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். திருக்கோயிலின் சுற்றுப்புறங்களில் 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட உள்ளன.
திருக்கோயிலில் 5 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவதோடு, நாள் முழுவதும் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். பக்தர்கள் இலகுவாக தரிசனம் மேற்கொள்ளும் வகையில் வரிசை அமைப்பானது (கியூ) நீடிக்கப்படுவதோடு, 20 அடிக்கு ஓரிடத்தில் காவலர் ஒருவரை நியமனம் செய்து அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும். திருக்கோயிலின் திருக்குளம் அருகிலும் மற்றும் நரசிம்மர் சன்னதி பின்புறமும் 20 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்படுகிறது. மூத்தக் குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வைகுண்ட ஏகாதசி அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் திருக்கோயிலின் பின்கோபுர வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களுக்காக 8 மின்கல வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் முதல்நிலை செயல் அலுவலர்கள் சிறப்புப்பணி அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட 100 தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் காலை 4.30 மணிக்கு திறக்கப்படும். அதற்கான தரிசனக் கட்டண சீட்டு ரூ.500/- க்கு ஆன்லைன் மூலம் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி பெற்று கொள்ளலாம். இதன்மூலம் 1,500 கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும். மேலும், 500 நபர்கள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பரமபதவாசல் தரிசனம் செய்ய கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர். பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு என்.கே.டி.பள்ளி மற்றும் இராணி மேரி கல்லூரியின் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுகிறது. திருக்கோயில்
அருகில் 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. கடந்த ஆண்டுகளில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சிறு குறைகளையும் நிவர்த்தி செய்து, எவ்வித சிறு அசம்பாவிதமும் இன்றி பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சிறப்பாக அமைந்திட அனைத்து ஏற்பாடுகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.