அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை - தமிழக அரசு திட்டம்
அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள பொதுமக்கள் செல்போன் கோபுரங்கள் மூலம் தான் இணையதள சேவை பெறுகின்றனர். இந்த சேவையில் இணையதளத்தின் வேகம் மிக குறைவாக தான் இருக்கும். அதிகபட்சமாக 10 மெகா பிட்ஸ் தான் இருக்கும். ஆனால் நகர்ப்புறங்களில் பைபர் கேபிள்கள் பொதுமக்கள் மிக அதிவேக இணையதள சேவையை பெறுகின்றனர். அதன் வேகம் குறைந்தபட்சமாக 100 மெகா பிட்ஸ் வரை இருக்கிறது.
நகர்ப்புற மக்களை போல், கிராமப்புற மக்களும் அதிவேக இணையதள சேவையை பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு, பாரத் நெட் மூலம் அதிவேக இணையதள சேவையை வழங்க திட்டமிட்டது. அதற்காக கிராமங்களில் பைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டன. இப்போது வரை சுமார் 950 கிராமங்களில் இந்த பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ளன.
எனவே அந்த கிராமங்களில் தனியார் ஆபரேட்டர்கள் உதவியுடன் இணையதள சேவை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த கிராமங்களில் அதிவேக இணையதள சேவை வழங்கப்படும் என தெரிகிறது. அதன்மூலம் அந்த கிராமங்களில் பொதுமக்கள் மிக அதிவேக இணையதளம் வசதி மட்டுமின்றி அளவின்றி இந்த சேவையை பெற முடியும்.
அதோடு இதற்கு குறைந்த கட்டணமே தமிழக அரசு வசூலிக்கும். அதிகபட்சமாக மாத கட்டணம் ரூ.150-க்குள் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. கிராமங்களில் அதிவேக இணையதள சேவை கிடைத்து விட்டால், அவர்கள் தடையின்றி ஆன்லைன் மூலம் தடையின்றி சினிமா பார்க்க முடியும். கல்வி சம்பந்தமான வீடியோக்களை மாணவ-மாணவிகள் பார்க்கலாம்என்று தமிழக அரசு நம்புகிறது.