மதுரையில் கனமழை பாதிப்பு: மீட்பு நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை


மதுரையில் கனமழை பாதிப்பு: மீட்பு நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
x

மழையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சென்னை,

மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் கடுமையான மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மதுரையில் கனமழை பெய்ததால், சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில் மதுரையில் கனமழை பெய்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை, தேவை இருப்பின் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு மழைத்தொடர்பாக மதுரை மக்கள் முன் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காண ஆலோசனை நடத்தப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில், மதுரையில் கனமழை பெய்து வருவதையொட்டி, காணொலி காட்சி மூலம், அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்களுடன் மழை பாதிப்பு குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story