பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புத்தம்பி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த நன்றி - சீமான்


பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புத்தம்பி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த நன்றி - சீமான்
x

கோப்புப்படம்

பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் நேற்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யும், சீமானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்குப் பிறகு சீமான், விஜய் கட்சியின் கொள்கைள் குறித்து கடுமையாக விமர்சித்த நிலையில், அவருக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியது பேசுபொருளானது. இந்த நிலையில், தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், முன்னாள் மாநில கவர்னரும், பா.ஜ.க. தமிழ்நாடு முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும்,

முத்தமிழ்ப்பேரறிஞர் வைரமுத்து அவர்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும், புரட்சித்தமிழன் பேரன்பிற்கினிய அண்ணன் சத்தியராஜ் அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்அவர்களுக்கும், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலை அவர்களுக்கும்,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும், பா.ஜ.க.வின் மகளிர் அணி தேசியச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச்சகோதரி வானதி சீனிவாசன் அவர்களுக்கும், மற்றும் அரசியல், திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும், உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story