புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு


புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 5 Dec 2024 9:55 PM IST (Updated: 6 Dec 2024 1:38 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை திருத்தப்பட்ட நாட்காட்டியின்படி அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அரையாண்டு தேர்வுக்காக மாணவர்கள் தங்களை தயார் செய்து வந்தனர். இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் தென்மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டிசம்பர் 21-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அண்மையில் அரையாண்டு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன்படி தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என்றும், ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நிலையில், அரையாண்டு தேர்வில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்தது.

இந்நிலையில் பெஞ்சல் புயல் பாதித்த கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஜனவரி 2ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. எனினும், முந்தைய அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறை (டிச.24-ஜன.01) இம்மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகள் திறந்தபிறகு செய்முறை தேர்வுகளை நடத்தவும், முடிக்கப்படாத பாடங்களை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story