குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி(Namma Grama Sabhai Mobile App) மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
குடியரசு தினத்தன்று (26.01.2025) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி குடியரசு தினத்தன்று(26.01.2025) காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவேண்டும்.
26.01.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம் நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது.
கிராம கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். மேலும் 26.012025 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும். கூட்ட நிகழ்வுகளை நல்ல கிராம சபை செயலி(Namma Grama Sabhai Mobile App) மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனவும். அது குறித்த அறிக்கையை 26.01.2025 அன்றே இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.