அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்


அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 3 Jan 2025 9:38 AM IST (Updated: 3 Jan 2025 11:19 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் துவக்க விழாவில், தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானத்திற்கு வரவேற்றுப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கு தேமுதிக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய கல்விக் கொள்கையில் ஒன்றான அரசு பள்ளிகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநில கல்வி உரிமைகலைப் பாதுகாத்திடும் அரசாக இந்த அரசு இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்குத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சாப்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைப் பலப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசுப்பள்ளிகளைத் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்குத் தாரைவார்க்க நினைப்பது, தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்படும் என்பது வீணான வதந்தி என்று அமைச்சர் அன்பில் மகேஷ் சப்பை கட்டுக் கட்டினாலும் இதன் உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். இல்லை என்றால் இந்த வதந்தி உண்மையாகக் கூடும் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகமாக இருக்கிறது. எனவே இதற்கான முழு விளக்கத்தையும் அமைச்சர் தர வேண்டும். எனவே தமிழக அரசு தனியார் பள்ளிகளின் தரத்திற்குச் சமமாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . என தெரிவித்துள்ளார் .


Next Story