அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை
கல்லூரி வளாகத்தில் காதலனும் காதலியும் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சென்னை,
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு, உணவு அருந்திய பிறகு தான் காதலிக்கும் 4ம் ஆண்டு மாணவர் உடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து மாணவரை தாக்கியுள்ளனர். மாணவரை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
இது குறித்து அந்த மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியிடம் அத்துமீறியவர்கள் பல்கலை. மாணவர்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் பணியில் இருந்த காவலாளிகள், கட்டுமான பணியில் இருந்த தொழிலாளர்கள், விடுதிக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர்கள், காய்கறி, மளிகை பொருட்கள் சப்ளை செய்பவர்கள் என விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவியிடம் முதற்கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மன ரீதியான கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. மாணவியின் காதலனிடம் நடத்தப்பட்ட விசாரணையும் நிறைவு பெற்றுள்ளது. மேலும் இந்த வழக்கின் குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கவுன்சிலிங் முடிந்து சிறிது ஓய்வுக்கு பின் மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.