வேளாண்மை சுற்றுலா திட்டத்திற்கு நிதி - பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு

கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை,
2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண்மை பட்ஜெட் உரையின் போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 1 லட்சம் ஏக்கரில், ரூ. 12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 15 கோடியில், 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும். நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
நம்மாழ்வார் விருது திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும்.
தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும். இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம், 7.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர். முதல்-அமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்.
கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது
முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும்.
இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும். இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்த்தப்படும்.
மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்:
63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண் சுற்றுலா திட்டத்திற்கு நிதி:
முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு விவசாயிகளை வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Live Updates
- 15 March 2025 5:14 AM
சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் அமைக்க ரூ.24 கோடி ஒதுக்கீடு.
வேளாண்மை பொறியியல் துறை எந்திரங்களை பயன்படுத்தி 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்