முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள்: அண்ணாமலை, டி.டி.வி. தினகரன் வாழ்த்து
ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலை, டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவருமான அன்பு அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து தமது மக்கள் பணிகள் மேற்கொள்ள வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "முன்னாள் முதல்-அமைச்சரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் அன்பிற்குரிய சகோதருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வம், நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.