சென்னையில் மலர் கண்காட்சி - நாளை மறுதினம் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
4வது மலர் கண்காட்சியை நாளை மறுதினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை
ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவிலும் மலர் கண்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 2ம் தேதி தொடங்கும் இந்த மலர் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்களுடன் பல விதமான மலர்கள் வைக்கப்படும். இதை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்ற போது மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு காரணமாகவே, தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை இந்த ஆண்டும் மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.150 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 4வது மலர் கண்காட்சியை நாளை மறுதினம் (ஜன. 2) செம்மொழிப் பூங்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 30 லட்சம் மலர்த் தொட்டிகளுடன், மலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பல உருவங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளன. 2022 முதல் சென்னையில் நடக்கும் மலர்க் கண்காட்சிக்காக ஊட்டி, (ஏற்காடு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.