தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கலெக்டர் க.இளம் பகவத் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவு தண்ணீா் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணியில் உள்ள மருதூா் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கன அடி தண்ணீா் இன்று வந்து கொண்டிருக்கிறது. மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீா் மருதூா் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், அகரம், ஆழ்வாா்திருநகரி, ஆத்தூா், முக்காணி, புன்னக்காயல் வழியாக கடலில் கலக்கும். எனவே, பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம். பொதுப்பணித் துறை, காவல் துறை வருவாய்த் துறையினா், உள்ளூா் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தியை அறிவித்து வருகின்றனா்.
ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், தேவைப்பட்டால் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்குமாறும், மக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம். மேலும், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ள நீர்வரத்து குறித்து மிகவும் உன்னிப்பாக அனைத்து நிலை அலுவலர்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்