திமுக அரசின் திட்டங்களைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல்: உதயநிதி ஸ்டாலின்
2026 தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
நாகை,
நாகையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
திமுக கூட்டணி உடையாதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருக்கிறார். திமுக கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி; மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கூட்டணிக்கு சேர்பவர்கள் ரூ.200 கோடி கேட்கிறார்கள்; 20 சீட் கேட்கிறார்கள் என கூறுகிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர். இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதாலும் அவருக்கு வயிற்றெரிச்சல்.
வருகின்ற 2026 தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை மக்கள் அளித்தார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம்.நாகை மாவட்டம் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நிறைந்த மாவட்டம். மழை, வெள்ள காலத்தில் மக்களை பாதுகாக்கும் காவலனாக மீனவர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.