எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயத்திற்காக வதந்திகளை பரப்புகிறார்: அமைச்சர் கீதாஜீவன்
மாணவியின் புகாரை பெற்ற உடனே விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கல்லூரி மாணவியரிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்வதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது;
"எங்கே எது நடக்கும் அதில் நமக்கென்ன அரசியல் ஆதாயம் கிடைக்கும் என அலைந்து கொண்டிருக்கும் பழனிசாமி, படிக்கவரும் கல்லூரி மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் தேவையின்றி அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அருவருக்கத்தக்க செயல்.
உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்நாடு அரசு உரிய பதில் அளித்துவிட்ட போதும் தனது சுய அரசியல் ஆதாயத்திற்காக இல்லாத ஒன்றை இருப்பது போல மேலும்மேலும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு கடும் கண்டனம்.
புதுமைப்பெண் திட்டம் , பெண்கள் விடியல் பயணம் , மகளிர் உரிமைத் தொகை என பெண் கல்விக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்துவரும் திராவிட மாடல் ஆட்சி மீதும், முதல்-அமைச்சர் மீதும் என்ன அவதூறு பரப்பினாலும் அதை தமிழ் நாட்டு பெண்கள் துளியும் நம்பபோவதில்லை.
எடப்பாடி ஆட்சியில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியே வந்து சொல்லவே பயப்பட்ட நிலை இருந்தது. புகார் பெறவே மாட்டார்கள், ஒருவேளை புகாரை பெற்றுக்கொண்டாலும் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மாட்டார்கள். அந்த நிலை மாறி தற்போது திராவிடமாடல் ஆட்சியில் பெண்கள் தைரியமாக வெளியே வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமையை சொல்கிறார்கள் என்றால் அது முதல்-அமைச்சர் மீது தமிழ்நாட்டு பெண்கள் வைத்துள்ள நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை இந்த திராவிட மாடல் அரசு என்றும் காக்கும்.
மாணவியின் புகாரை பெற்ற உடனே எவ்வளவு விரைவாக செயல் பட்டு விசாரணை நடத்தி குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளான் என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். தேவையின்றி அரசியல் செய்வதையும் வதந்திகளை பரப்பி மாணவிகளின் கல்வியோடு விளையாடுவதையும் நிறுத்தி கொள்ளுங்கள்.
தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், படிக்கும் மாணவர்கள் சார்ந்த இந்த சென்சிட்டிவ் விவகாரத்தில் அரசியல் செய்து, அரசியல் அறத்தையும் மாண்பையும் குழி தோண்டி புதைத்துவிட்டார் பழனிசாமி. அவரது இந்த அற்பத்தனமான செயலை தமிழ்நாட்டு மக்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.