எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை.. அதனால் தான் அறிக்கை வெளியிடுகிறார் - அமைச்சர் சேகர்பாபு
பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருந்தால் யார் என்ன செய்ய முடியும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "பிறந்த நாள் அறிவிப்பு வெளியிட்ட போது உதயநிதி ஒரு வேண்டுகோள் விடுத்தார். தனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம். ஆடம்பரம் வேண்டாம். ஏழை, எளிய மக்களுக்கு, வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கல்வி உதவி தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை, திருநங்கைகளுக்கு உதவி தொகை, கருணை இல்லங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி இருந்தார். அன்று 21 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தோம். இதனை எப்படி ஆடம்பரம் என்று எடுத்து கொள்ள முடியும். பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருந்தால் யார் என்ன செய்ய முடியும். மஞ்சள் காமாலை கண்களுக்கு பார்ப்பது அனைத்துமே மஞ்சளாகத்தான் தெரியும். தலைவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு வேறு வேலை இல்லை. அதனால் இப்படி அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார்" என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த 25-ம் தேதி சென்னை கண்ணகி நகரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், "அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை கொடுத்திருக்கிறாரே, உங்களின் பதில் என்ன ? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "அவருக்கு வேறு வேலை இல்லை.. தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார்..அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.