லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ. 8.80 கோடி பறிமுதல்

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை,
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1,300 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து பிரபலமானவர் கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
இதனிடையே, லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ. 910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி உள்ளது.
அதேவேளை, கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் கோவையில் உள்ள மார்ட்டின் மற்றும் அவருடைய மருமகன், உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனாவிற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை, கோவை, அரியானாவின் பரிதாபாத், பஞ்சாப்பின் லூதியானா, மேற்குவங்காளத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும், இன்றும் என இரு நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ. 8.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.