"இந்த மாதிரி தவறை செய்யாதீர்கள்; ஹெல்மெட் அணியுங்கள்.." - பைக் சாகசத்தில் ஈடுபட்டு கைதான இளைஞர்


இந்த மாதிரி தவறை செய்யாதீர்கள்; ஹெல்மெட் அணியுங்கள்.. - பைக் சாகசத்தில் ஈடுபட்டு கைதான இளைஞர்
x

ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு கைதான இளைஞர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்து வருகின்றன.

இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பாக 28 வயது இளைஞர் ஒருவர் இந்த சாலையில் தனது பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டார். அதிலும் பைக்கின் பின் இருக்கையின் நுனியில் அமர்ந்து கைகளால் ஹேண்டில் பாரினை பிடிக்காமல் சென்றார். இது அவருக்கு மட்டுமல்லாமல் அருகில் செல்வோருக்கும் ஆபத்தை விளைவிப்பதை போல் அமைந்தது.

இதனை வீடியோவாக எடுத்து சில சோசியல் மீடியாவில் சிலர் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ டிரெண்டான போது, சமூக ஆர்வலர்கள் பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வாகனம் யாருடையது, அந்த இளைஞர் யார் என்று காவல்துறை விசாரணையை தொடங்கியது. இந்தநிலையில் பொது இடத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவரை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவில் அந்த இளைஞர் கூறுகையில், "என் பெயர் பாலகிருஷ்ணன். பிப்.27ம் தேதியன்று பல்வேறு பணிகளுக்காக என் வண்டியை எடுத்து சென்ற போது, கைகளை விட்டு பைக்கை ஓட்டியது சமூகவலைதளங்களில் பெரிய செய்தியாக பரவிவிட்டது. இதன்பின் சமயபுரம் போலீசார் என்னை கைது செய்து, வழக்குப்பதிவு செய்துவிட்டார்கள். இனிமேல் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக் ஓட்டுவேன், இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன். இந்த தவறை யாரும் செய்ய வேண்டாம். இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு முன் ஹெல்மெட்டை அணிய வேண்டும்" என்று கைகளை கூப்பி வேண்டுகோள் விடுத்தார்.

இளைஞரின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது.


Next Story