பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாளான இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்று பேசி மலிவான அரசியல் செய்யக்கூடாது. தி.மு.க. அரசின் மீது களங்கம் ஏற்படுத்த சிலர் எடுக்கும் முயற்சிகள் ஒருபோதும் எடுபடாது. உயர்கல்வி கற்க வரும் மாணவிகளை அச்சுறுத்தி அவர்களின் கல்வியை கெடுக்க வேண்டாம்.
பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் பேட்ஜ் அணிந்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. யார் அந்த சார்? என்பதற்கு ஆதாரம் இருந்தால், அதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்குங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதான ஞானசேகரன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் அல்ல; தி.மு.க. ஆதரவாளர் மட்டுமே. தி.மு.க.வைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது... யாராக இருந்தாலும் கடுமையான, உச்சபட்ச தண்டைனையைச் சட்டப்படி பெற்றுத் தருவோம்.
வாச்சாத்தி, தருமபுரி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி நடத்திய கட்சியின் 'சார்கள்' பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்! சென்சிட்டிவான ஒரு வழக்கில், குறுகிய நோக்குடன் செயல்பட்டு, அரசியல் லாபத்துக்காக நம் மாணவர்களின் கல்வியைப் பாழாக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.