மருத்துவர் தகுதித் தேர்வினை அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்த வேண்டும் - சீமான்


மருத்துவர் தகுதித் தேர்வினை அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்த வேண்டும் - சீமான்
x

கோப்புப்படம் 

தனியார் நிறுவனத்தின் மூலம் சிறப்புத்தகுதி தேர்வு நடத்துவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2026-ம் ஆண்டுவரை காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களுக்கு எதிர்வரும் 05.01.2025 அன்று நடைபெறும் மருத்துவர் நியமனத் தேர்வானது, அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படாமல், டாடா கன்சல்டன்சி என்ற தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 வகைப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்று வந்த ஊழல் மற்றும் முறைகேடுகளைக் களையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தை ( MRB – Medical Services Recruitment Board) தொடங்கியது. 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை 6 ஆண்டுகளில் 4 முறை தேர்வுகள் நடத்தி 13 ஆயிரம் மருத்துவர்கள் எவ்வித குளறுபடிகளின்றி மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 1,061 மருத்துவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தி.மு.க. அரசு நிரப்பாதது ஏன்? என்று பலமுறை நான் கண்டனம் தெரிவித்த பிறகு, வரும் ஜனவரி மாதம் தனியார் நிறுவனம் மூலம் மருத்துவர்கள் நியமனத்திற்கான தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்தார். அதோடு, பெரிய அளவில் மருத்துவர்கள் தேர்வினை தனியார் நிறுவனத்தின் மூலமே நடத்த முடியும் என்றும் திராவிட மாடல் அரசின் அமைச்சரே கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால் தி.மு.க. அரசின் நிர்வாகத்திறமை இன்மையை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா?

கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் பணியிடங்களை நிரப்பிய தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் வெறும் 2,553 மருத்துவர்கள் நியமனத்திற்கான தேர்வினை நடத்த முடியாதா?

24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதால் பெரிய தேர்வினை தனியார் நிறுவனத்தால் மட்டுமே நடத்த முடியும் என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால், இதே தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து 1,061 மருத்துவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டனரே? தற்போது அதைவிடக்குறைவான தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வினை அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்த முடியாதா?

மருத்துவப்பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் காரணமாகவே அரசு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் இந்தியாவிலேயே முதல்முறையாக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தனியார் நிறுவனம் நடத்தும் சிறப்புத்தகுதி தேர்வு மூலமே மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற அமைச்சர் மா.சுப்ரமணியத்தின் அறிவிப்பு அரசு மருத்துவர்கள் பணி நியமனத்தில் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெறுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே, தனியார் நிறுவனத்தின் மூலம் சிறப்புத்தகுதி தேர்வு நடத்துவது பெரும் ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அம்முடிவைக் கைவிட்டு, வழக்கம்போல அரசு மருத்துவப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமே மருத்துவர் தகுதித்தேர்வினை நடத்தி காலியாகவுள்ள அரசு மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story