தி.மு.க. அரசை மக்கள் பாராட்டுவதால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரிகிறது: மு.க.ஸ்டாலின்


தி.மு.க. அரசை மக்கள் பாராட்டுவதால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரிகிறது: மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 Dec 2024 6:42 PM IST (Updated: 4 Dec 2024 6:46 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சியில் மழை வெள்ளத்தில் இருந்து அடுத்த நாளே சென்னை மீண்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை, வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, எரிசக்தி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 29 முடிவுற்ற பணிகளையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

பெஞ்சல் புயலால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கான நிவாரணப் பணிகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. பெஞ்சல் புயல் பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.

கடந்த ஆட்சியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, ஆட்சியாளர்களை களத்தில் பார்க்க முடியாது. நிவாரணப் பொருட்களில் கூட ஸ்டிக்கர் ஒட்டுவர். நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களை மிரட்டுவார்கள். கடந்த ஆட்சியில் சென்னையில் மழை வந்தாலே எப்போது நீர் வடியும் என்று மக்கள் தவித்தனர். தி.மு.க. ஆட்சியில் மழை வெள்ளத்தில் இருந்து அடுத்த நாளே சென்னை மீண்டுள்ளது.

சிலரின் விடியா முகங்களுக்கு எப்போதும் விடியல் ஏற்படாது. அவர்கள் அவதூறு பரப்பி மலிவான அரசியலில் ஈடுபடுகின்றனர். தி.மு.க. அரசை மக்கள் பாராட்டுவதால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரிகிறது. மக்கள் நலப்பணிகளை அரசு செய்வதால் அரசியல் செய்ய முடியாமல் சிலர் தவிக்கின்றனர். பொதுமக்கள் தெரிவிக்கும் நியாயமான விமர்சனங்களை கேட்டு சரிசெய்வோம். வெள்ளம் குறைந்ததும் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க நான் வந்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story