செயல் திறனின்மையால் அடுத்தடுத்து உயிர்களை பலி வாங்கும் தி.மு.க. அரசு - ராமதாஸ்
செயல்திறனற்ற தி.மு.க. அரசால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை பட்டினப்பாக்கத்தை அடுத்த சீனிவாசபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது தளத்தில் பால்கனி இடிந்து விழுந்ததில் குலாப் என்ற இளைஞர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இளைஞர் குலாப் எந்த தவறும் செய்யவில்லை. குடிசை மாற்று வாரிய வீடுகளின் தரம் குறைந்த கட்டுமானமும், பராமரிப்பின்மையும்தான் அப்பாவி இளைஞரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. இன்னும் 4 மாதங்களில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது இழப்பு அவரின் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாதது ஆகும்.
தமிழ்நாடு முழுவதுமே குடிசைமாற்று வாரிய வீடுகளில் பால்கனி இடிந்து விழுவது, சன்ஷேட் இடிந்துவிழுவது போன்ற விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குடிசை மாற்று வாரிய வீடுகளின் தரம் மற்றும் உறுதி குறித்து ஆய்வு செய்து குறைகளை சரி செய்திருந்தால் ஓர் அப்பாவி உயிரிழந்திருக்க மாட்டார். அரசின் அலட்சியத்தால் பல்லாவரம் பகுதியில் கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் மூவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அரசின் அலட்சியத்தால் இன்னொரு இளைஞர் உயிரிழந்திருக்கிறார்.
செயல்திறனற்ற தி.மு.க. அரசால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது. குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளின் தரம் மற்றும் உறுதியை ஆய்வு செய்து, கட்டிடங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.