தி.மு.க. அரசும், கவர்னரும் புது காதலர்கள் போல இணக்கமாகிவிட்டனர் - செல்லூர் ராஜூ விமர்சனம்


தி.மு.க. அரசும், கவர்னரும் புது காதலர்கள் போல இணக்கமாகிவிட்டனர் - செல்லூர் ராஜூ விமர்சனம்
x

கோப்புப்படம் 

தி.மு.க. அரசும், கவர்னரும் புது காதலர்கள் போல தற்போது இணக்கமாகிவிட்டனர் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை,

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளையொட்டி மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் பருவ மழைகளையும் புயல்களையும் சிறப்பாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்தோம். ஆனால் தி.மு.க. அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மழை நேரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் போட்டோசூட் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

சனிக்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்கே மதுரை தாங்கவில்லை. மழை பெய்தபோது மேயர், அமைச்சர் வந்து பார்க்காமல் மழைநீர் வடிந்த உடன் ஆய்வு செய்கிறார்கள். இதற்கெல்லாம் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள். வரிமேல் வரி போட்டும் மக்களுக்கு எதையும் மாநகராட்சி செய்யவில்லை. அமைச்சர் மூர்த்திகூட மதுரையில் அவர் தொகுதியில்தான் ஆய்வு செய்கிறார்.

தி.மு.க. அரசும், கவர்னர் ஆர்.என்.ரவியும் புது காதலன், காதலி போல இணக்கமாகிவிட்டனர். கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்றார்கள். ஆனால் முதல்-அமைச்சரும், மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர். திடீரென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.7,500 கோடி ஒதுக்குகிறார்கள். இதை பார்க்கும்போது, எல்லாம் தேன் நிலவு போல நடக்கிறது.

கவர்னர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்துச்சொல்வார். ஆனால் தற்போது மாறி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story