இளைஞர்களின் எதிர்காலத்தை தி.மு.க. அரசு அழிக்க நினைக்கிறது - ஓ. பன்னீர்செல்வம்


இளைஞர்களின் எதிர்காலத்தை தி.மு.க. அரசு அழிக்க நினைக்கிறது - ஓ. பன்னீர்செல்வம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 19 March 2025 10:55 AM (Updated: 19 March 2025 10:55 AM)
t-max-icont-min-icon

அரசு வேலை, இளைஞர்களுக்கு காலதாமதமின்றி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வனத்தை வளர்த்து, இயற்கையை காத்து, மாசற்ற நிலையை உருவாக்கி, வளரும் தலைமுறையைக் காக்கும் வகையில், தமிழகத்தின் பசுமைப் போர்வையை அதிகரித்திட வனங்களுக்கு வெளியேயும் மரங்களை நட்டு பராமரிக்கும் திட்டங்களை செயல்படுத்துவது மிக மிக அவசியம் ஆகும். இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றால், தமிழ்நாடு வனத்துறையில் ஏற்படும் சீருடைப் பணியாளர் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2012-ம் ஆண்டு உருவாக்கினார். இதற்கும் தி.மு.க. அரசு மூடுவிழா நடத்திவிட்டது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ், 15-05-2012 அன்று தமிழ்நாடு வனத்துறையில் சீருடைப் பணியாளர்களாக உள்ள வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் ஆகிய பதவிகளில் காலிப் பணியிடங்கள் ஏற்படும்போது. அவை உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டியது அவசியம் ஆகும். எனவே, தமிழ்நாடு காவல்துறையில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்து நிரப்பும் நடைமுறையைப் போல் தமிழ்நாடு வனத் துறையிலும் வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் ஆகிய பதவிகளில் ஏற்படும் நேரடி நியமனத்திற்கான காலிப் பணியிடங்களை நிரப்ப, மாநில அளவில் "தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்" ஏற்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, வனத்துறையில் ஏற்படும் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற பணியிடங்கள் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் நிரப்பப்பட்டு வந்தன.

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் எந்தத் தேர்வும் நடத்தப்படவில்லை. மாறாக, வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) போன்ற பதவிகளுக்கான 1,161 பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி நான்கின் கீழ் 30-01-2024 அன்று விளம்பரப்படுத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், பணி நியமனங்கள் இன்னமும் நடைபெறவில்லை என்று வனத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்தப் பணியிடங்களுக்கான தேர்வினை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் நடத்தியிருந்தால், பணி நியமனங்கள் எப்பொழுதோ நடைபெற்று, முதலாமாண்டு ஊதிய உயர்வினைப் பெற்றிருப்பார்கள். ஒருவேளை, காலிப் பணியிடங்கள் நிரப்புவதை வேண்டுமென்றே தாமதப்படுத்த தி.மு.க. அரசு நினைக்கிறதோ என்ற சந்தேகம் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன்மூலம், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்திற்கு மூடுவிழா நடத்த தி.மு.க. அரசு முடிவெடுத்துள்ளது என்பது தெளிவாகிறது. "ஆக்குவது கடினம், அழிப்பது சுலபம்" என்பார்கள். அழிக்கும் பணியைத்தான் தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. தி.மு.க.வின் தீய எண்ணத்தால் பாதிக்கப்படுபவர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் ஏழை, எளிய இளைஞர்கள்தான். இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் தி.மு.க. அரசின் செயல்பாட்டிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி வரும் ஆண்டுகளிலாவது, வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) போன்ற பணியிடங்களை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் தேர்ந்தெடுக்கவும், அரசு வேலை இளைஞர்களுக்கு காலதாமதமின்றி கிடைக்கவும் முதல்-அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story