போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தவறிய திமுக அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
போதைப்பொருள் விற்பனையை பலமுறை சுட்டிக்காட்டியும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னை மாதவரம் அருகே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கடந்த வாரம் மணிப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே மாதவரத்தில் மேலும் 16 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் போதைப்பொருட்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஊடுருவியிருப்பதையே வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
மாநிலத்தின் தலைநகர் தொடங்கி அனைத்துப் பகுதிகளிலும் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் தாராளமாகப் புழங்கும் போதைப்பொருள் விற்பனையை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசும், அதன் முதல்-அமைச்சரும் விளம்பரங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல நாடகமாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
போதை மாத்திரை, ஊசி, சாக்லேட்டுகள் போன்ற பல்வேறு வடிவங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் போதைப் பொருட்களால் மாணவர்களின் கல்வி மட்டுமல்லாது எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் தீர விசாரித்து அதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.