'விஜய்யை அரசியல்வாதியாக தி.மு.க. அங்கீகரிக்கவில்லை' - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்


விஜய்யை அரசியல்வாதியாக தி.மு.க. அங்கீகரிக்கவில்லை - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
x

விஜய்யை அரசியல்வாதியாக தி.மு.க. அங்கீகரிக்கவில்லை என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

சென்னையில் நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்றார். மேலும், "வேங்கைவயல் ஊரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோல் தெரியவில்லை. இதையெல்லாம் அம்பேதகர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுணிந்துபோவார்" என்று விஜய் விமர்சித்தார்.

இந்நிலையில், விஜய்யின் பேச்சுக்கு தி.மு.க. தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விருதுநகரில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேங்கைவயலுக்கு விஜய் சென்றாரா? அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினாரா? இப்போது கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் இறங்கி அவர் உதவி செய்யவில்லை. அவர்களை வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார்.

இதுதான் அவருடைய அரசியல். விஜய்யை அரசியல்வாதியாக தி.மு.க. அங்கீகரிக்கவில்லை. அவரைப் பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. முதல்-அமைச்சர் சொன்னதுபோல் நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம். எங்களுடைய குறிக்கோளான 200 தொகுதிகளில் வெற்றி என்பது இப்போது 234 ஆக மாறியுள்ளது" என்று தெரிவித்தார்.


Next Story