மாவட்டவாரியாக மக்கள் பிரச்சினைகள்: விவரங்களை சமர்ப்பிக்குமாறு விஜய் அறிவுறுத்தல்


மாவட்டவாரியாக மக்கள் பிரச்சினைகள்: விவரங்களை சமர்ப்பிக்குமாறு விஜய் அறிவுறுத்தல்
x

த.வெ.க.வின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந் தேதி அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.

சென்னை,

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்தது. இந்த விழாவுடன் சேர்த்து பொதுக்குழு கூட்டத்தை கூட்ட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நிர்வாகிகள் நியமனம் தாமதம் தொடர்பாக பொதுக்குழு கூட்ட தேதி தள்ளிப்போனது. கட்சியில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டு, தற்போது வரை 114 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தவிர மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. கட்சியின் சட்ட திட்ட விதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. கட்சியின் செயல்பாடு, கூட்டணி நிலைப்பாடு குறித்து நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்க இருக்கிறார். இந்த கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு, மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 2,500 பேர் பங்கேற்க இருக்கிறார்கள். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. .

இந்நிலையில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு பகுதிகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது, அப்பகுதி மக்களின் குறைகள் உள்ளிட்டவற்றை அறிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் தயாரித்து, வரும் பொதுக்குழு கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே. விஜய் பொதுமக்களை நேரில் சந்திப்பது இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளநிலையில், தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, நிர்வாகிகளிடம் பெற்ற அறிக்கைகளை மக்கள் முன் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story