மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருக்கோவில்கள் சார்பில் 5,000 உணவு பொட்டலங்கள் வினியோகம்
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருக்கோவில்கள் சார்பில் 5,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோவில்கள் சார்பில் இன்று காலை முதல் உணவு பொட்டலங்கள் தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில், கந்தக்கோட்டம் அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில் சென்னை வடபழனி அருள்மிகு ஆண்டவர் திருக்கோவில், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவில், திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில், வில்லிவாக்கம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், பாடி, அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், அமைந்தக்கரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருக்கோவில்,
வேளச்சேரி அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்கள் சார்பில் இன்று 5,000-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. இப்பணிகளை சம்பந்தப்பட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர்கள். செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.