திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு: தி.மு.க. அரசே முழு பொறுப்பு - எடப்பாடி பழனிசாமி

கோப்புப்படம்
அறநிலையத்துறையை அறத்துடன் வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்ய 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் திருச்செந்தூர் கோவிலுக்கு தி.மு.க. அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்றிருந்த போதே, கோவிலில் கட்டண வரிசை உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படுவதை மக்கள் முறையிட்டபோது, "திருப்பதிக்கு போறான், 24 மணி நேரம் நிப்பான்" என்று பக்தர்களின் உணர்வுகளையும், முறையிடலையும் உதாசீனப்படுத்தி பேசியதோடு அல்லாமல், கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.
எனவே, பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு!
திருப்பணி என்பது பக்தியுடன் செய்யப்பட வேண்டியது. ஆனால், பகல்வேஷம் போடும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் அதுவும் வெறும் விளம்பர நோக்கத்தில் மட்டும் தான் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம். இந்த அரசுக்கு துளியும் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.
உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், இனியேனும் இந்த விளம்பர நாடகங்களை எல்லாம் விட்டுவிட்டு, அறநிலையத்துறையை அதற்குரிய அறத்துடன் வழிநடத்த வேண்டுமென ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.