"ஈஷா அறக்கட்டளை மீதான புகார்களை முழுமையாக விசாரிக்க வேண்டும்" - முத்தரசன் வலியுறுத்தல்
ஈஷா அறக்கட்டளை மீதான குற்றவியல் மற்றும் உரிமையியல் புகார்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. அண்மையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.காமராஜ் தனது இரண்டு மகள்கள் ஈஷா ஆசிரமம் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை மீட்டுத் தர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு விசாரித்த போது ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் தொடர்பாக பதிவாகியுள்ள அனைத்து வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை நான்கு நாட்களுக்குள் வழங்குமாறு செப்டம்பர் 30ம் தேதி, காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கோவை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துறையினர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், சமூக நல அலுவலர்கள் ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. ஆசிரமத்தின் முறையீட்டை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு செப்டம்பர் 30-ம் தேதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து, காவல்துறை விசாரணையை தொடர தடை விதித்தது.
ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் தொடர்பான வழக்குகளின் தற்போதைய நிலவரம் குறித்து சென்னை ஐகோர்ட்டு கோரிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி காவல்துறை 23 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணையை முடித்து வைத்து, ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் தொடர்பான இதர வழக்குகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் விசாரிக்கவும், செப்டம்பர் 30-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவுக்கும் தடையில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தின் மீதான குற்றவியல் மற்றும் உரிமையியல் புகார்களை முழுமையாக விசாரித்து, உண்மை நிலவரத்தை நாட்டுக்கும், மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.