கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்: பள்ளிகளுக்கு விடுமுறை; போக்குவரத்து மாற்றம்

கோப்புப்படம்
தேர்திருவிழாவை முன்னிட்டு கோனியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
கோவை,
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.05 மணிக்கு நடைபெற உள்ளது. இதனால், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநகரில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர் சாலை, ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, சலிவன் வீதி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கான முகூர்த்த கால் கடந்த மாதம் 10-ந் தேதி நடப்பட்டது. தொடர்ந்து கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியும், 25-ந் தேதி கோவில் கொடியேற்றமும், அக்னிசாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து நாள்தோறும் அக்னி கம்பத்திற்கு பக்தர்கள் நீர் ஊற்றி வழிபட்டனர்.
தேர்திருவிழாவை முன்னிட்டு கடந்த 26-ந் தேதி அம்மன் புலி வாகனத்திலும், 27-ந் தேதி கிளி வாகனத்திலும், 28-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 1-ந் தேதி அன்ன வாகனத்திலும், 2-ந் தேதி காமதேனு வாகனத்திலும், நேற்றுமுன்தினம் வெள்ளை யானை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நேற்று மாலை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் சீர்வரிசையுடன் வந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மன் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டதும், பக்தர்கள் ஓம் சக்தி என்று வாழ்த்து கோஷமிட்டனர். இதையடுத்து அம்மன் திருக்கல்யாண அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து திருமுறை பண்ணிசை வாசிக்கப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) மதியம் 2.05 மணிக்கு நடக்கிறது. இதில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர்பாபு, சாந்தலிங்க மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமி, கலெக்டர் பவன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கின்றனர்.
இதன்படி இன்று காலை 4 மணிக்கு அபிஷேகமும், 5 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த தேரானது ராஜவீதியில் உள்ள தேர்முட்டியில் தொடங்கி ஒப்பணக்கார வீதி, வைஷியால் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர் முட்டியை வந்தடைகிறது. தேர்திருவிழாவை முன்னிட்டு கோனியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கோவை மாநகரில் 24 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கோனியம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு கோவை ராஜவீதி துணிவணிகர் சங்க பெண்கள் பள்ளி, வீராசாமி முதலியார் உயர்நிலைப்பள்ளி, புனித மைக்கேல்ஸ் மேல்நிலைப் பள்ளி, சவுடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புனித பிரான்சிஸ் மகளிர் உயர்நிலைப்பள்ளி உள்பட 24 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எவ்வித மாற்றமின்றி இன்று (புதன்கிழமை) தொடங்கி நடைபெறும்"என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து மாற்றம்
கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக மாநகருக்குள் வாகனங்கள் வர தடை செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில் வலது புறம் திரும்பி அசோக்நகர் ரவுண்டானா, பேரூர் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் சென்று செல்ல வேண்டும்.
வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் பைபாஸ் சாலை, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டை அடைந்து செல்லலாம். மருதமலை ரோடு தடாகம் ரோட்டில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அந்தப் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம் புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு செல்வபுரம் மாநகராட்சி பள்ளி வழியாக செல்லலாம்.
உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக தடாகம் ரோடு, மருதமலை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னையராஜபுரம் வழியாக தடாகம் சாலையை அடைந்து செல்லலாம்.
சுக்கிரவார்பேட்டை சாலையில் இருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜவீதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மாநகருக்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தேர்த்திருவிழா நடைபெறும் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை. இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர் செல்லும் போது பட்டாசு மற்றும் வெடிகள் வெடிக்கக்கூடாது.
பக்தர்கள் அதிக ஒலியை எழுப்பக் கூடிய ஊதுகுழல்களை பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர யாரும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தேரை நெருங்கக்கூடாது. அப்படி சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் கோனியம்மன் கோயில் எதிர்ப்புறம் உள்ள கார் பார்க்கிங் மற்றும் உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிரே மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.