கோவை: திடீரென தீப்பிடித்த மின்சார பெட்டியால் பரபரப்பு - போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தில் மின்சார பெட்டியில் இருக்க கூடிய வயர்கள் அனைத்தும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
கோவை அவிநாசியில் உள்ள ஹோப் கல்லூரி அருகே இருக்க கூடிய மின்சார பெட்டியில் புகை வெளிவந்து திடீரென தீ ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று முதலில் பக்கெட் தண்ணீரை ஊற்றி பார்த்தனர்.
இருப்பினும் தீயானது அணையவில்லை. இதனைக்கண்ட மற்றொரு நபர் ஒருவர் தீயை அணைக்கும் கருவியை பயன்படுத்தி நெருப்பை அணைத்தார். இந்த விபத்தால் மின்சார பெட்டியில் இருக்க கூடிய வயர்கள் அனைத்தும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
இது குறித்து தகவலறிந்த போலீசார் இந்த விபத்து பற்றி மின்சார துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை உடனடியாக துண்டித்தனர். தற்போது மின்சார பெட்டியை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த எதிர்பாராத விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.