முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு செல்கிறார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு செல்கிறார்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு செல்கிறார்.

சென்னை,

ஈரோடு மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் அரசின் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு சோலாரில் உள்ள புதிய பஸ் நிலைய வளாகத்தில் நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.952 கோடியே 35 லட்சம் செலவில் முடிவுற்ற 560 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார். இதுதவிர மாவட்டம் முழுவதும் ரூ.141 கோடியே 41 லட்சம் செலவில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டு கிறார். ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.1,377 கோடியே 76 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

இதற்காக அவர் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் மதியம் 12 மணிக்கு ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வந்து சேருகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு மேட்டுக்கடை தங்கம் மகாலில் நடைபெறும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு முத்து மகாலில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். இரவு 7 மணிக்கு காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு காலிங்கராயன் மாளிகையில் இருந்து புறப்பட்டு சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். விழா முடிந்ததும் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

விழாவுக்காக சோலார் புதிய பஸ் நிலைய வளாகத்தில் சுமார் 1,800 சதுர அடியில் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் பந்தல் போடப்பட்டு 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் முதல்-அமைச்சரின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை காண பந்தல் பகுதிகளில் ஆங்காங்கே மிகப்பெரிய அளவில் எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story