முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல: கவர்னர் மாளிகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என்று கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடர் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. அப்போது சட்டசபையில் தேசியகீதத்தை முதலில் பாடவில்லை என குற்றச்சாட்டு கூறி கவர்னர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார். அவர் உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் திரும்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் முன்வைத்தனர். மேலும் கவர்னரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், கவர்னரின் செயலை விமர்சித்த முதல்-அமைச்சருக்கு பதில் அளிக்கும் வகையில், கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர் (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின்), கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி.
இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.