சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சென்னையில் போக்சோ வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரிக்கப்பட்டது.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் தம்பதியின் 13 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, 38 வயதுடைய அவரது உறவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றவாளியை போக்சோ சட்டத்தின் கீழ் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள போக்சோ வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, ``சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. அதனால், அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும். இதுதவிர தமிழ்நாடு அரசு இழப்பீடாக ரூ.3 லட்சத்தை வழங்கவேண்டும்'' என்று தீர்ப்பு அளித்துள்ளார்.