சென்னை: மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


சென்னை: மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
x

துப்புரவு பணியாளர்களுக்கு சிற்றுண்டி, பிரட், போர்வை உள்ளிட்ட உதவி பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நலக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (16.10.2024) சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளில் இடைவிடாது பணியாற்றி வரும் 600-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு சிற்றுண்டி, பிரட், போர்வை உள்ளிட்ட உதவி பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி மண்டலம் 9-க்கு உட்பட்ட 116-வது வார்டு வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நலக் கூடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் உணவு சமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் சமுதாய கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் உள்ள மருந்துகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்ததுடன், முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவ தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். சிறப்பு மருத்துவ முகாமில் 1 மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் உள்பட 6 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வுகளில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டல குழுத்தலைவர் எஸ்.மதன்மோகன், மண்டல கண்காணிப்பு அலுவலர் மு.பிரதாப், துணை ஆணையர் ( பணிகள்)சிவ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story