தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள்; கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் - சவுமியா அன்புமணி
தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளை கலப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளை கலப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என 'பசுமை தாயகம்' அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"தென்பெண்ணை ஆறு கர்நாடகத்தில் உற்பத்தியாகி, கெலவரப்பள்ளி அணை மூலமாக தமிழ்நாட்டிற்குள் வருகிறது. அவ்வாறு வரும்போது நிறைய ரசாயன கழிவுகளை கொண்டு வருவதால், அந்த தண்ணீரில் அதிக ரசாயன நுரை காணப்படுகிறது. ஆனால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதனை மக்கள் உபயோகிக்கும் சோப்பு மற்றும் சலவை பொருட்களால் ஏற்படும் நுரை என்று கூறியிருக்கிறார்கள். அது உண்மை கிடையாது.
அந்த தண்ணீர் வரும்போதே ரசாயன நுரையோடுதான் வருகிறது. இதை யார் செய்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து, அவர்களிடம் நஷ்டஈடு கேட்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளை கலப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.