மத்திய அரசின் வரி பகிர்வில் தமிழகத்துக்கு பாரபட்சம் - செல்வப்பெருந்தகை கண்டனம்


மத்திய அரசின் வரி பகிர்வில் தமிழகத்துக்கு பாரபட்சம் - செல்வப்பெருந்தகை கண்டனம்
x

மத்திய பா.ஜ.க. அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க மறுத்து வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளால் பெறப்படும் நிதியை மத்திய அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒரு நிதியாண்டில் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதம் மட்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 28 மாநிலங்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 73 ஆயிரம் கோடியை வரி பகிர்வாக மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 31,000 கோடியும், 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு ரூபாய் 7,057 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, 10 கோடி மக்கள் தொகை கொண்ட பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 17,000 கோடியும், 9 கோடி மக்கள் தொகை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 13,000 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மாநிலங்களுக்கிடையேயான வரி பகிர்வில் மத்திய பா.ஜ.க. அரசு அப்பட்டமான பாரபட்ச போக்கை கடைபிடித்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கு முரணாகவும் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

புயல், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மொத்தம் ரூபாய் 36,000 கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் 226 கோடி. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 2,028 கோடி செலவு செய்திருக்கிறது.

மேலும், மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததாலும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்காததாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய ரூபாய் 2,159 கோடி கடந்த பல மாதங்களாக ஒதுக்கப்படாமல் இருக்கிறது. இதனால், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூன் மாதத்திலிருந்து சம்பளம் வழங்க முடியாத நிதி நெருக்கடியில் கல்வித்துறை சிக்கியிருக்கிறது. இத்தகைய போக்கின் காரணமாக தமிழ்நாடு கல்வித்துறை கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மும்மொழி திட்டத்தை நீண்டகாலமாக ஏற்க மறுக்கிற மாநிலம் தமிழ்நாடு.

ஆனால், அதை திணிக்கிற வகையில் அமைந்துள்ளதால் இப்புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. அந்த அடிப்படையில் கல்வித்துறையை பொறுத்தவரை எந்த முடிவெடுத்தாலும் மாநிலங்களை கலந்துதான் எடுக்க வேண்டும். ஆனால், மாநிலங்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தின் மீது திணிக்கிற மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சியை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. இதனால், மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க மறுத்து வருகிறது. இத்தகைய போக்குகளின் காரணமாக கூட்டாட்சி முறை மிகப்பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய பா.ஜ.க. ஆட்சியும், பிரதமர் மோடியும் அனைத்து மாநிலங்களையும் சமமாக கருத வேண்டும். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்று பாரபட்சம் காட்டுமேயானால், தேசிய ஒருமைப்பாடு என்பது கேலிப் பொருளாகிவிடும் என மத்திய அரசை எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story