அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு - ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில்


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு - ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில்
x

கோப்புப்படம் 

சொத்துக்குவிப்பு புகாரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வகுரணி சந்தைப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை உசிலம்பட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த நீதிபதி என்பவர் வருமானத்துக்கு அதிகமாக மதுரை, திண்டுக்கல் பகுதியில் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

அவர் தனது மனைவி ஆனந்தி, மகள் ஜெயதேவி, மகன் இளஞ்செழியன் பெயரிலும், பினாமிகள் பெயரிலும் இந்த சொத்துகளை வாங்கி உள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எனக்கு தெரியவந்தது. எனவே, முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி 19.4.2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'இந்த வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணை நிறைவடைந்து விட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அனுமதி அளித்துள்ளார். ஒரு வார காலத்தில் அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படும்' என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.


Next Story