நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு


நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு
x

தெலுங்கு மக்கள் தொடர்பான பேச்சு சர்ச்சையான நிலையில், தனது பேச்சுக்கு நடிகை கஸ்தூரி நேற்று மன்னிப்பு கேட்டார்.

சென்னை,

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, தெலுங்கு மக்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது. இதற்கு பா.ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்தது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தன.

இதையடுத்து நடிகை கஸ்தூரி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டார். அதில், நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களை சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானவை அல்ல; கவனக்குறைவாக ஏதேனும் மோசமான உணர்வை நான் ஏற்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் நலன் கருதி, தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய அனைத்து கருத்துகளையும் வாபஸ் பெறுகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையில், தெலுங்கு மக்கள் பற்றி பேசியது தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது பல போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அனைத்து தெலுங்கு சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் கஸ்தூரி மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களிடையே பிரச்சினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சன்னாசி அளித்த புகாரில் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


Next Story