ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை இடைமறித்து அச்சுறுத்தல்; 6 பேர் கைது


தினத்தந்தி 31 Jan 2025 3:27 AM (Updated: 31 Jan 2025 5:57 AM)
t-max-icont-min-icon

ஈசிஆர் சாலையில் பெண்கள் பயணித்த காரை இடைமறித்து அச்சுறுத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் இளம்பெண்கள் 2க்கும் மேற்பட்டோர் கடந்த 25ம் தேதி இரவு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் சென்ற காரை, 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். மேலும், இளம்பெண்களையும், அவருடன் வந்தவர்களையும் அச்சுறுத்தும் வகையில் நடுரோட்டில் காரை மறித்து அவர்களின் காரை நோக்கி ஓடி வந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் அச்சத்தில் அலறி கூச்சலிட்டனர். மேலும், தங்கள் காரை ரிவர்ஸ் எடுத்து தப்பிக்க முயன்றனர். அப்போது, அந்த கும்பல் தங்கள் கார்களில் விரட்டி வந்தனர். திமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் வந்த இளைஞர்கள், காரில் வந்த இளம்பெண்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் நேற்று முன் தினம் வைரலானது.

இரவு நேரத்தில் காரில் பயணித்த இளம்பெண்களை மிரட்டும் வகையில் செயல்பட்ட அந்த கும்பலை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக காரில் பயணித்த பெண், கானத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஈசிஆர் சாலையில் காரை நிறுத்தி இளம்பெண்களை அச்சுறுத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இளம்பெண்களை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


Next Story