விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கிய பட்ஜெட் - அண்ணாமலை விமர்சனம்

2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட் தாக்கல் தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இடங்களில் ஒன்றில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் காலியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க. வெளியிடும் பட்ஜெட்டும், இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க. வெளியிடும் பட்ஜெட்டும், இது போன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.