காலை உணவுத் திட்டம்: 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு

கோப்புப்படம்
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை,
தமிழக பட்ஜெட் உரையின் போது நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
சங்ககாலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர் ஒருவர் ஏழை எளியோரின் பசியைப் போக்கியதால், பசிப்பிணியைப் போக்கிய மருத்துவராகப் போற்றப்படுகிறார். அம்மரபின் வழிவந்து, தமிழ்ச் சமூகத்தை வழிநடத்திய தலைவர்கள் பலரும் காலந்தோறும் வறுமையை அகற்றிடவும், மாணவர்களின் கல்வி நலன்களைப் பாதுகாத்திடவும் பல முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, "பள்ளிக் கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும் எல்லாக் குழந்தைகளும் பசியின்றிக் கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்" என்று அறிவித்த முதல்-அமைச்சர் அவர்களின் உன்னத நோக்கத்தினை உள்வாங்கி அறிமுகப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்' வாயிலாக, தமிழ்நாட்டிலுள்ள 30,992 அரசுப் பள்ளிகளிலும், ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள 3,995 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17.53 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளதோடு, அவர்களின் ஊட்டச்சத்தும் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம், தமிழ்நாட்டின் நகரப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் மேலும் விரிவுபடுத்தப்படும்.
இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.