ரஜினி வராததால் விஜய்யை வைத்து பாஜக கட்சி தொடங்கியுள்ளது: சபாநாயகர் அப்பாவு
நடிகர் விஜய் பாஜகவின் 'பி டீம்' என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரோடு நானும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன். ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன்.
திமுக பணம் சம்பாதிப்பதாக விஜய் சொல்லி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும்போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். ஒருவர் மற்றவர்களை குறை சொல்லும்போது தான் உண்மையாக இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அப்படி பாஜகவோடு நெருக்கமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்தை, எப்படி கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள்; அவர் வரவில்லை; அவருக்கு பதிலாக விஜயை ஏற்பாடு செய்து இருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நடிகர் விஜய் பாஜகவின் பி டீம். எத்தனை விமர்சனங்கள் செய்தாலும் அதை தாங்க கூடிய அரசாகவும் மக்கள் நலனுக்காகவும் இந்த அரசு தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.