'பொதிகை என இருந்த பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பா.ஜ.க. அரசுதான்' - எல்.முருகன்


பொதிகை என இருந்த பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பா.ஜ.க. அரசுதான் - எல்.முருகன்
x
தினத்தந்தி 19 Oct 2024 10:32 AM IST (Updated: 19 Oct 2024 10:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் ஒலிபரப்பப்படும் ஒரு சேனலின் பெயரில் தமிழே இல்லாமல் இருந்தது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி தி.மு.க. கூட்டணி கட்சிகள் அவதூறு பிரசாரம் செய்து வருவதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை தூர்தர்ஷன் டிடி தமிழ் சேனலில் இந்தி வார நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக கூறி வன்மத்தை கக்கும் விதமாக குற்றச்சாட்டு சுமத்திய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்.

டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாத நிறைவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டபோதே இந்திக்கு விழா எடுப்பதாகவும், தமிழ் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்தியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலும் கூட மத்திய அரசின் எல்லா துறைகளிலும் இந்தி விழா நடத்தப்பட்டுள்ளது. இதே சென்னை தூர்தர்ஷனிலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்தி விழா நடந்தேறியுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தகாலத்திலும் இதே இந்தி விழா நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஏதோ தற்போது புதிதாக நடந்தது போல தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நேற்று முதலே மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக விஷமப் பிரசாரம் செய்தனர். கவர்னர் ஆர்.என்.ரவி ஒவ்வொரு விழாவிலும் தமிழ்த் தாய் வாழ்த்தை பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவது அனைவருக்கும் தெரியும். இருந்தும் இந்த விவகாரத்தை வைத்து கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் வன்மத்தை கக்குவது ஏன்?

பொதிகை என இருந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பாஜக அரசுதான். தமிழில் ஒலிபரப்பப்படும் ஒரு சேனலின் பெயரில் தமிழே இல்லாமல் இருந்தது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது இதே அவலநிலைதான் இருந்தது. சென்னை தூர்தர்ஷனை தமிழ் என அடையாளப்படுத்தி தொடங்கி வைத்தது பிரதமர் மோடிதான்.

1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இந்தியை அலுவல் மொழியாக அறிவித்து விழா எடுத்தது யார்..? இதை அப்போது செய்த பிரதமர் ஜவகர்லால் நேரு அல்லவா. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் முப்பாட்டனார் நேரு காலத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த இந்தி விழா பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தெரியுமா தெரியாதா? அப்படி தெரியும் என்றால் தனது தலைவர் ராகுல் காந்தியிடம் இந்த கேள்விகளை கேட்க வேண்டியது தானே?

உலகின் மிக மூத்த தொன்மையான, இனிமையான மொழி தமிழ் என்பதை உள்ளூரில் தொட்டு ஐ.நா. மன்றம் வரை சென்று உரக்க சொன்னவர் பிரதமர் மோடி. செல்லுமிடங்கள் எல்லாம் தமிழின் பெருமையை பேசி வருபவர். தெய்வப் புலவர் திருவள்ளூர் தொடங்கி தமிழுக்கு தொண்டாற்றிய நமது முன்னோர்களை எல்லாம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெருமையுடன் பேசி புகழ் சேர்த்து வருபவர். காசி தமிழ் சங்கமம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு இருக்கை என தமிழின் புகழை பறைசாற்றிக் கொண்டிருப்பவர் பிரதமர் மோடி.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம் என வெளிநாட்டு பல்கலைக்கழங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதும் பா.ஜ.க. ஆட்சியில்தான். தமிழ் மொழி மனித குலத்துக்கு வழங்கிய அருட்பெரும் கொடைகளான திருக்குறள் உள்ளிட்ட நூல்களை பிற மொழியில் மொழி பெயர்த்து தமிழின் பெருமைய உலகறிய செய்து வருபவர் பிரதமர் மோடி.

அதுபோலவே நாட்டின் தொன்மையான, வளமான, உயிர்ப்புமிக்க மொழியான தமிழை, நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப கவர்னர் ஆர்.என்.ரவியும் ஏராளமான முயற்சிகளை செய்து வருகிறார். அசாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுகாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுவுள்ளது.

மக்களை திசை திருப்புவதன் மூலமும், வழக்கமான ஒன்றை மடைமாற்றுவதன் மூலமும் அரசியல் செய்ய முடியுமா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், தி.மு.க. கூட்டணிக் கட்சியினரும் எண்ணுகின்றனர். ஆனால் இவர்களின் கபட எண்ணங்களை தமிழக மக்கள் நம்பப்போவதில்லை."

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story