திருவண்ணாமலை கோவில் வளாகத்தில் கற்பூரம் ஏற்ற தடை
திருத்தேரோட்டம் நடைபெறும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் கோவில் வளாகத்தில் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டம் தொடங்கி உள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை கோவிலின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகாதேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
மேலும் வருகிற 13-ம் தேதி அண்ணாமலையார் கோவில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 2ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பரணி தீபத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூட உள்ளனர்.
திருவண்ணாமலையில் இன்று திருத்தேரோட்டம் நடைபெறும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் கோவில் வளாகத்தில் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருத்தேரோட்டத்தை ஒட்டி மாடவீதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் அங்கு ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப திருவிழாவையொட்டி, கிரிவலம் தொடர்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை காவல் துறை வெளியிட்டிருந்தது.
அதன்படி திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல், ஆசிர்வதித்தில் என்ற போர்வையில் ஏமாற்றியும், மிரட்டியும் பணம் வசூலிப்பது, குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்பாகவோ, கிரிவலப்பாதையிலோ கற்பூரம் ஏற்றக்கூடாது. கால்நடை உரிமையாளர்கள், கால்நடைகளை கிரிவலப்பாதையில் உலவ விடக்கூடாது. உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களிம் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். பக்தர்கள் கிரிவல பாதையை ஓட்டியுள்ள நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அனுமதியின்றி வனப்பகுதியில் பிரவேசிப்பதும், மலையின் மீது ஏற முயற்சிப்பது குற்றம். அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.