சென்னையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்பு

சென்னை தியாகராய நகரில் பிறந்து 45 நாள் ஆன, ஆண் குழந்தை நேற்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை,
சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் ஆரோக்யதாஸ். இவருக்கும், நிஷாந்தி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி இவர்களது வீட்டிற்கு தீபா எனும் பெண் வந்திருக்கிறார்.ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்களை பெற்று தருபவர் என்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்ட தீபா, ஆண் குழந்தைகளுக்கு என அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், என்னுடன் வந்தால் நலத்திட்ட உதவிகளை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பி நிஷாந்தி தனது குழந்தையுடன் நேற்று தி.நகர் சென்றுள்ளார். தி.நகரில் உள்ள ஓட்டலில் நிஷாந்தியும் தீபாவும் உணவு அருந்தியுள்ளனர். அப்போது சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்ற போது, தீபாவிடம் குழந்தையை விட்டுவிட்டு தாய் நிஷாந்தி சென்றுள்ளார். ஆனால், தாய் நிஷாந்தி கை கழுவிவிட்டு வருவதற்குள் குழந்தையை எடுத்துக்கொண்டு தீபா ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்தி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
துரிதமாக செயல்பட்ட போலீசார், தீபா ஏறிச்சென்ற ஆட்டோவின் எண்ணை கண்டுபிடித்தனர். இதை வைத்து நடைபெற்ற விசாரணையில், திருவேற்காடு பகுதியில் தீபா குழந்தையை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தீபாவை கைது செய்த போலீசார், குழந்தையை இன்று பத்திரமாக மீட்டுள்ளனர்.