அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
12 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
மதுரை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பிடித்தனர்.
காலை 6.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது. இதில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் கே.கார்த்தி முதலிடம் பிடித்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் நிசான் கார் மற்றும் கன்றுடன் பசு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன்.
குன்னத்தூரை சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி 2-வது இடத்தை தட்டிச் சென்றார். திருப்புவனத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் முரளிதரன் 14 காளைகளை அடக்கி 3-வது இடம் பிடித்தார்.
சிறந்த காளையாக மலையாண்டி என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் மற்றும் கன்றுடன் பசு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.